திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் இறுதியாக வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 6041 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 106 கர்ப்பிணி தாய்மார்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தின் அறிக்கையின்படி இதுவரை 160 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதாகவும், பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார விதிமுறைகளை பேணி நடக்குமாறும் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் தொடர்ந்தும் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளிகளை பேணுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.