மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அத்தியாவசியமற்ற எந்தவொரு பயணத்தையும் மாகாணங்களுக்கிடையில் மேற்கொள்ள வேண்டாம்.மாகாணங்களுக்குள் உட்புகும் பிரதான மற்றும் குறுக்கு வழிகள் அனைத்து முடக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.
தனிப்படுத்தல் சட்டத்தைமீறி எவரும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் கைதுசெய்யப்படுவர்.அத்துடன் அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் பெறப்படும் என்றார்.