அரசின் முகவர்கள் தேர்தல் களத்தில் – அனந்தி குற்றச்சாட்டு

ஆளும்தரப்பு பல அரச முகவர்களை தேர்தல் களத்தில் களமிறக்கி இருக்கிறது. பிரதேச செயலகத்தில் இருந்து வருவதாக கூறி எமது மக்களின் அடையாள அட்டைகளை டதிவுசெய்கின்றனர் என ஈழ தமிழர் சுயாட்சி கழக செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

கொக்குவில், பொற்பதியில் இன்று இடம்பெற்ற  பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை தாங்கள் தான் நிறைவேற்றியது போன்று புகைப்படங்களை எடுத்து பதாகைகளை  சிலர் காட்சிப்படுத்துகின்றனர். இதனை அரசாங்க உத்தியோகத்தர்கள் கண்டும் காணாமலும் இருப்பது கவலையளிக்கிறது.

2009ம் ஆண்டில் இருந்து எனது கணவர் உட்பட காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம். இறுதியுத்தத்தில் புலிகள் உட்பட 7000 பேர இறந்துள்ளனர் என யாழ்மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத்தளபதி சர்வேநதிர சில்வா கூறுகின்றார்.

அப்படியானால் ஏன் சரியானதொரு கணக்கெடுப்பை செய்ய முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபை போன்ற சுயாதீனமான நிறுவனங்கள் கணக்கெடுப்பினை மேற்கொள்ள முயற்சி செய்த போதும் அரசு அதனை தடுத்தது.

இலங்கையின் இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது. இலங்கை அரசு குற்றமிளைக்கவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணையை தடுக்கின்றார்கள், என்றார்.

Comments are closed.