விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வருத்தம்
விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவது வருத்தமளிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திரதினத்தை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் பார் கவுன்சில் சார்பில் விழா கொண்டாடப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்றி வைத்தார்.
பின்னர் உரையாற்றிய அவர், நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி, பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற வழக்கறிஞர்கள்தான் தலைமை வகித்ததாக குறிப்பிட்டார். அவர்களின் சொத்துகள் மற்றும் குடும்ப வாழ்க்கை அனைத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்ததாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முதலில் அமைந்த மக்களவை, மாநிலங்களவை இரண்டிலுமே சட்டம் படித்தவர்கள்தான் நிறைந்திருத்ததாகவும் தெரிவித்தார்.
சட்டம் இயற்றும்போதும், சட்டத்தைத் திருத்தும்போதும் நாடாளுமன்ற அவைகளில் முன்பெல்லாம் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டங்கள் குறித்து ஆழமாகவும், விரிவாகவும் விவாதிக்கப்பட்டதோடு, அது குறித்து தெளிவும் இருந்ததாக கூறியுள்ளார்.
ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் காணப்படும் நிலை துரதிருஷ்டவசமானது எனவும், ஆக்கப்பூர்வமான, தரமான விவாதங்கள் நடத்தப்படாததால், அந்த சட்டத்தின் நோக்கத்தையும், பொருளையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சட்டங்கள் குறித்து விவாதங்கள் நடந்தால், நீதிமன்றத்தின் சுமை குறையும் என்றும், தற்போது சட்டங்கள் குறித்து தெளிவு இல்லை என்பதால், நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற அவைகளில் வழக்கறிஞர்களும், அறிவாளிகளும் இல்லாவிட்டால் இவ்வாறு தான் நடக்கும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.