சமையல் எரிவாயு உருளை விலை ரூ.25 உயர்வு
மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
சா்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி மற்றும் 15-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.825 இருந்த நிலையில் ஜூலை 1 -ஆம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.850 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு சரியாக ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று, மீண்டும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் இன்று முதல் ஒரு எரிவாயு உருளை ரூ.875-க்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு மற்றும் வேலையில்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 -ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வு நடுத்தர வா்க்கத்தினா், ஏழைகளை கடும் சிரமமான நிலைக்கு தள்ளியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. 16 ஆம் தேதி மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டது. அடுத்த சில தினங்களில் ரூ.25 உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.100 உயர்த்தப்பட்டது. மார்ச் 1 ஆம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டு ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.825 ஆக விற்பனையானது.
இதையடுத்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக மார்ச் 31 ஆம் தேதி சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு விலை ரூ.10 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.