கொலைக் குற்றவாளிகளை 20 நிமிடத்தில் காட்டிக் கொடுத்த மோப்ப நாய்
குஜராத் மாநிலம் வதோதராவில், 38 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை வெறும் 20 நிமிடத்தில் காவல்துறை மோப்ப நாய் காட்டிக் கொடுத்தது.
18 மாதங்களேயான பெண் டாபர்மேன் நாய், வதோதரா காவல்துறையில் மோப்ப நாயாக பணியில் சேர்ந்து ஒரு மாத காலமே ஆகிறது. தனது மோப்ப சக்தியை நிரூபிக்க அதற்கு வெகு காலம் தேவைப்படவில்லை.
ஜாவா என்று பெயரிடப்பட்ட அந்த மோப்ப நாய், பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை வெறும் ஒன்றரை மணி நேரத்தில் முடித்துவைத்து விட்டது.
அதன் கூரிய பார்வை, மோப்ப சக்தி, உடல் திறன் போன்ற அனைத்துக்கும் சவால்விடும் வகையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்த துப்பட்டா மற்றும் பாட்டில்களை மட்டுமே மோப்பம் பிடித்த ஜாவா, உடனடியாக வடக்கு திசை நோக்கி நடக்கத் தொடங்கியது. சுமார் 2 கிலேர் மீட்டர் தூரம் ஓடிய ஜாவா, வயல் வெளி, குப்பைமேடு என கடந்து அகமதாபாத் – மும்பை ரயில் தண்டவாளத்தைத் தாண்டியது.
பிறகு அங்கிருந்த ஒரு குடிசைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களைப் பார்த்து குரைத்தது. இதைப் பார்த்ததும், காவல்துறையினர் புரிந்து கொண்டனர், ஜாவா தனது இலக்கை அடைந்துவிட்டது என்பதை. உடனடியாக அந்த குடிசைக்குள் இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு பல குடிசைகள் இருக்கும்போது, ஒரே ஒரு குடிசையை மட்டும் நாய் காட்டிக்கொடுத்ததால், அதில் இருந்த நபர்கள் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 16ஆம் தேதி டேதான் கிராமத்தில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்மணி, வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, 6 பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்து, கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் உதவியோடு, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தத் தொடங்கிய வெறும் 30 நிமிடத்தில், அப்பகுதியில் பதுங்கியிருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோப்ப நாய்க்கும், அதன் பயிற்சியாளரான தலைமைக் காவலர் ஹரேஷ் மொஹானியாவுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.