வர்த்தக நடவடிக்கைகள் முடக்கம் : மீறுவோர் மீது கடும் நடவடிக்கை!
கொரோனாப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பின் வர்த்தக நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துவது என்றும் அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து வர்த்தகம் வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எமது புதுக்குடியிருப்பு பிரதேசமானது கொரோனாத் தொற்றில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் அனைத்து உரிமையாளர்களையும், பணியாளர்களையும், மக்களையும் இக் கொடிய நோயில் இருந்து பாதுகாப்பதற்காக எமது வர்த்தக சங்க நிர்வாகம் கூட்டப்பட்டு ஒருவாரத்துக்கு வர்த்தக நிலையங்களை மூடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 21.08.2021 அதிகாலை 4.00 மணியில் இருந்து 27.08.2021(வெள்ளிக் கிழமை) அதிகாலை வரைக்கும் ரயர்க்கடை(ரயர் ஒட்டுபவர்கள் மட்டும்), மருந்தகம் (பாமசி)தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவ் அறிவித்தலை மதிக்காது தங்களது வர்த்தக நிலையங்களை திறந்தால் தங்களுக்கு எதிராக புதுக்குடியிருப்பு சுகாதாரப் பிரிவினரின் தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் தாங்களும் தங்களது வர்த்தக நிலையங்களும் தனிமைப் படுத்தப்பட்டு அன்ரியன் பரிசோதனையும் பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு தாங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவீர்கள் என்பதனை மன வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு புதுக்குடியிருப்பு அழகர் சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகத்தினரும் இவ் ஒன்று கூடலில் பங்கேற்றிருந்தனர். எனவே அழகர் சங்கத்தினரும் இவ் நடைமுறையினை பின்பற்றி தங்களது கடைகளையும் மூடி ஒத்துளைப்பு வளங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
எனவே எம் உறவுகள் கொரோனாத் தொற்றினால் சுவாசத்தை இழந்து எம் கண் முன்னே தவிப்பதனை நிறுத்தி எமது ஊரினையும் உறவுகளையும் பாதுகாப்போம் எல்லோரும் ஒன்றுபட்டால் மட்டுமே எமது உயிர்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே எம் ஊரின் உறவுகளே தங்களுக்கு தேவையான பொருட்களை இன்றும் நாளையும் வர்த்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.