கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை டெல்லிக்கு
தில்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைநகர் தில்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியின் சப்தர்ஜங் விமான நிலையப் பகுதியில் இன்று காலை 8:30 மணி வரை 138.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது மழைக்காலப் பருவத்தின் அதிகபட்ச ஒரு நாள் மழை அளவாகும்.
தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தில்லியைப் போன்றே உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் மிதமான முதல் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.