தேர்தலைக் காட்டி கருணாவுக்கு எதிரான மனு தள்ளுபடி
கருணா அம்மானைக் கைதுசெய்யுமாறு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வரவழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன என்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு, குறித்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இரண்டு இடங்களில் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைகளில், கருணா அம்மான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளார் என்று தெரிவித்து, அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும், குறித்த அறிக்கைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ரூ. ஒரு மில்லியன் இழப்பீடு கோரியும் குறித்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்று (21) குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிக்கு அழைப்பாணை விடுக்காமலேயே நீதிபதிகள் குழாமினால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த பொலிஸ் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது எனவும், நியாயமான காரணம் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்ற குழாமினால் இம்மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கடுவல நகர சபை உறுப்பினரும், பிரத்தியேக வகுப்பு ஆசிரியருமான போசெத் கலேஹேபத்திரணவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில், சட்டமா அதிபர், கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த ரிட் மனுவில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் என்பவர் அம்பாறை மாவட்டத்தில், தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
கடந்த ஜூன் 20ஆம் திகதி அம்பாறையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய கருணா அம்மான், கொரோனா வைரஸை விட தான் ஆபத்தானவர் என்றும், ஆனையிறவுப் பகுதியில் ஒரே இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இராணுவ வீரர்களைக் கொன்றதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
மேலும், ஜூலை 03ஆம் திகதி, பகிரங்கமாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அனைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களையும் கொல்லுமாறு தனக்கு அறிவுறுத்தினார் எனவும், அவர் அவ்வாறு செய்திருந்தால், இப்போது எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது எனவும் கருணா அம்மான் பொது வெளியில் கூறியிருந்தார்.
இந்த இரண்டு அறிக்கைகள் மூலமாகவும், கருணா அம்மன் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 293 மற்றும் 294 பிரிவுகளின் கீழ் ஒரு குற்றமாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் ஐக்கிய நாடுகளின் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார்.
சாட்சியங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட, இது ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகும்.
இந்த அறிக்கை தொடர்பாக பேராசிரியர் ஓமல்பே சோபித தேரரினால் சி.ஐ.டியில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்.
எனவே, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மானைக் கைதுசெய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” – என்று மனுதாரர் கோரியுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட சேதத்திற்கு ரூ. 10 இலட்சம் இழப்பீட்டையும் பெற்றுத் தருமாறும் மனுவின் மூலம் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக மனுதாரர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
Comments are closed.