சகலரினதும் ஆலோசனைகளையும் கேட்பதற்குத் தயார் நிலையில் அரசு அமைச்சர் காமினி லொக்குகே.
“அரசு என்ற வகையில் நாட்டைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி உள்ளடங்கலாக அனைவரினதும் ஆலோசனைகளையும் சுகாதார வழிமுறைகளுக்கு அமையக் கேட்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.”
இவ்வாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அனைத்து எதிர்க்கட்சியினரும் நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதேபோன்று சுயமுடக்க நிலைக்குச் சென்றனர். ஆனால், ஒரு வாரத்துக்கு முன்னர் சுகாதார விதிமுறைளை மீறி எதிர்ப்பு நடவடிக்கைளை முன்னெடுத்தனர். இதன்காரணமாக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நாட்டில் அதிகரித்துள்ளது.
இந்தத் தரப்பினர் நாட்டு மக்களை நேசிப்பதன் காரணமாக இவ்வாறு செயற்படுகின்றனரா? அல்லது தமது அரசியல்
தேவைப்பாட்டை நிறைவேற்றிக்கொள்வதற்காக இவ்வாறு செயற்படுகின்றனரா?
நாம் அரசு என்ற வகையில் நாட்டைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி உள்ளடங்கலாக அனைவரினதும் ஆலோசனைகளையும் சுகாதார வழிமுறைகளுக்கு அமையக் கேட்பதற்குத் தயாராகவுள்ளோம். அதற்கமையவே ஜனாதிபதியும் செயற்பட்டு வருகின்றார்.
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தால், கொரோனா வைரஸ் தொற்றையும் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும். ஜனாதிபதியின் நடவடிக்கையின் காரணமாக இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை வழங்கக்கூடியதாகவுள்ளது.
ஆனால், தற்போது கருத்து தெரிவிக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் எப்போதும் எமக்கு ஆதரவை வழங்கவில்லை. தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை நாம் ஆரம்பித்தபோது, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்ததுடன், அவர்களுடைய கோரிக்கைளை நிறைவேற்றிக்கொள்ள முற்பட்டனர்.
ஆனால், இராணுவ வைத்தியப் பிரிவினர் இருந்தமையின் காரணமாக அந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கக் கூடியதாகவிருந்தது” – என்றார்.