இலங்கையின் நீதித்துறை மீது இன்னமும் நம்பிக்கை உண்டு! ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு.
“நீதிச் சேவைகள் ஆணைக்குழு எவ்வாறு செயற்பட்டாலும் இந்த நாட்டின் நீதித்துறை தொடர்பில் எமக்கும் இன்னும் நம்பிக்கை உள்ளது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாகக் கூறியமைக்காக கனியவளத்துறை பொதுச்சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த கைதுசெய்யப்பட்டார்.
எனினும், எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் முயற்சியால் எமது சட்டத்தரணிகள் முன்னிலையாகி அவரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது நீதிவான் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் கூறினார். கருத்துக் கூறும் சுதந்திரத்துக்குப் பொலிஸாரால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது.
ஆனந்த பாலித்த கூறிய கருத்தில் பொய்யான விடயங்கள் எதுவும் இல்லை என்று நீதிவான் தெரிவித்திருந்தார்.
போலியான தகவலால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருப்பின் அது ஆனந்த பாலித்த தெரிவித்த கருத்தால் இல்லை. அரசிடம் டொலர் இல்லை. இதன்காரணமாகவே எரிபொருள் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டது.
எனவே, எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறியதன் காரணமாகவே மக்கள் மத்தியில் எரிபொருள் தொடர்பில் அச்சநிலை ஏற்பட்டது எனவும் எமது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறான கருத்தைக் கூறிய அமைச்சர் வெளியில் இருக்கும்போது உண்மையான கதையைக் கூறியவரை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு முயற்சித்த கீழ்த்தரமான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய சேவை சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது.
அதேபோன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு எவ்வாறு செயற்பட்டாலும் இந்த நாட்டின் நீதித்துறை தொடர்பில் எமக்கும் இன்னும் நம்பிக்கை உள்ளது” – என்றார்.