மத்தியபிரதேசத்தில் மகள் விளையாட்டாக கேட்கிறார் என நினைத்து தாய் கூறிய பதிலால் தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவி
இந்தியாவில் முகரம் நாளில் உயிரிழந்தால் சொர்கத்துக்கு செல்லலாம் என தாய் கூறியதையடுத்து 15 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசத்தின் இண்டோரை சேர்ந்தவர் ரபியா (15). பள்ளி மாணவியான இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் முகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தனது தாயாரிடம் சென்று இன்று முகரம் அன்று உயிரிழந்தால் நாம் சொர்கத்துக்கு செல்லலாமா என கேட்டுள்ளார்.
மகளும் விளையாட்டாக கேட்கிறார் என நினைத்த தாய் ஆமாம், சொர்கத்துக்கு செல்லலாம் என கூறினார். சிறிது நேரத்தில் தனது அறைக்குள் சென்ற ரபியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரபியாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்தனர். அப்போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரபியா தனது பள்ளி நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது சுற்றுலா சென்ற இடத்தில் அவரின் தோழி விபத்தில் உயிரிழந்துள்ளார். அப்போதில் இருந்து ரபியா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
அன்றிலிருந்து அடிக்கடி குடும்பத்தாரிடம், வாழ்வு மற்றும் சாவு என்றால் என்ன? எப்போது வேண்டுமானாலும் நமக்கு மரணம் ஏற்படலாம் என கூறிவந்தார்.
ரபியா மனநிலையில் பிரச்சினை ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார், இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.