இலங்கை, இந்திய ‘சக்தி’ கப்பல்களை நேரில் பார்வையிட்டார் கடற்படைத் தளபதி!
இந்தியாவிலிருந்து சிகிச்சைக்கான ஒட்சிசனைக் கொண்டுவந்துள்ள இந்திய கடற்படை மற்றும் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சக்தி’ கப்பல்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பார்வையிட்டார்.
இரண்டு கப்பல்களின் கப்டன்கள் மற்றும் கடற்படையினருக்கும் நன்றிகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.
அதேவேளை, அவசர தேவைக்கான சிகிச்சைக்கான ஒட்சிசனை இலங்கைக்கு விரைவாகக் கொண்டுவருவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக இந்தியக் கடற்படையினருக்கும், மிகக் குறுகிய கால அறிவிப்புக்கு இணங்க கப்பலை தயார் செய்து விரைவாகவே இந்தியாவிலிருந்து ஒட்சிசனைக் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்த இலங்கை கடற்படையின் சக்தி கப்பல் குழுவினருக்கும், கடற்படைத் தளபதி தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான ஒட்சிசனை இலங்கைக்கு விரைவாகக் கொண்டு வருவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பணிப்புரைக்கமைய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கடற்படைத் தளபதி இந்தியக் கடற்படைத் தளபதியான அட்மிரல் கம்பீர் சிங்கிடம் விடுத்த வேண்டுகோளின் பிரதிபலனாக, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சக்தி கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டின துறைமுகத்திலிருந்து 100 தொன் ஒட்சிசனுடன் கடந்த 22ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சக்தி கப்பலைப் பார்வையிட்ட கடற்படைத் தளபதி இந்திய கடற்படையினர் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.