இந்தியா – இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்தியா – இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் இரு டெஸ்ட் போன்று இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மழை புகுந்து கெடுத்து விட்டது. அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புரட்டி எடுத்ததோடு தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் வலுவான அடித்தளம் அமைத்து தந்ததே தொடரில் இந்தியா முன்னிலை பெற்றதற்கு முக்கிய காரணம். ரோகித் சர்மாவை பொறுத்தவரை பவுன்சராக வரும் பந்துகளை ‘புல்ஷாட்’டாக விரட்டும் போது கூடுதல் கவனம் தேவையாகும். இந்த வகையில் அவர் இரண்டு முறை விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்.
வானிலையை பொறுத்தவரை லீட்சில் 5-வது நாளில் மட்டும் மழை வாய்ப்பு உள்ளது. மற்ற நாட்களில் தென்றல் காற்று வீசிக் கொண்டே இருக்கும். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே நிலவும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், இந்தியா 4 வேகம், ஒரு சுழல் என்ற யுக்தியில் மாற்றம் செய்யாது என்று தெரிகிறது. கேப்டன் கோலியும் இதனை சூசகமாக தெரிவித்தார். மேலும் கோலி, ‘ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்த மாதிரி இல்லாதது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது’ என்று குறிப்பிட்டார். பிரதான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் களம் திரும்புவதற்குரிய வாய்ப்பு முழுமையாக முடிந்து விடவில்லை என்றும் கோலி தெரிவித்தார்.
லார்ட்ஸ் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜியின் ஆக்ரோஷமான பவுலிங் (8 விக்கெட்) இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தது. இன்றைய டெஸ்டிலும் அவரது ஜாலம் தொடர்ந்தால் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை 22 டெஸ்டில் விளையாடி 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, இந்த டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றினால் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.
இதே போல் காயத்தால் விலகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டுக்கு பதிலாக சகிப் மமூத் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 2-வது டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பரிகாரம் தேடும் வேட்கையுடன் இங்கிலாந்து இருப்பதால் இந்த டெஸ்டிலும் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இங்கு கடைசி இரு டெஸ்டுகளில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது (1986 மற்றும் 2002-ம் ஆண்டு) கூடுதல் நம்பிக்கையை தருகிறது. 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 628 ரன்கள் குவித்தது சிறப்பம்சமாகும்.
இங்கிலாந்து அணி இங்கு கடைசியாக விளையாடிய 10 டெஸ்டுகளில் 4-ல் வெற்றி, 5-ல் தோல்வி, ஒன்றில் டிரா கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா அல்லது அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சகிப் மமூத் அல்லது கிரேக் ஓவர்டான்.