பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்புக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரியில் 3% குறைக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கின்றன. அதுமட்டுமின்றி சில்லறை விற்பனையில் மத்திய மாநில அரசுகள் வரிகளை விதிப்பதால், பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் குறைத்துள்ளன. தமிழகத்தில் 3 ரூபாயும், ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் ஒரு ரூபாயும், அசாமில் 5 ரூபாயும் குறைக்கப்பட்டது.

மேகாலயாவில் பெட்ரோல் விலையில் 7 ரூபாய் 40 காசுகளும், டீசல் விலையில் 7 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதுடன், மதிப்புகூட்டு வரி 2 ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டதையடுத்து அண்டை மாநிலமான புதுவையிலும் பெட்ரோல் விலை குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவும் எட்டப்பட்டது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கப்படும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிற்கு துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார்…

அதன்படி பெட்ரோல் விலை 2.43 ரூபாய் குறையும், புதுச்சேரியில் 99.52 ரூபாய் ஆகவும் காரைக்காலில் 99.30 ரூபாய் ஆகவும் பெட்ரோல் விற்க்கப்படும் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவித்தது.

2020ம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 54.63 டாலர்களுக்கு இந்தியா வாங்கிய நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ரூபாய் 94 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 64 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையானது. இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 63 டாலர்களுக்கு வாங்கப்பட்ட சூழலில், ஒரு லிட்டர் பெட்ரோல் 89 ரூபாய் 29 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் 79 ரூபாய் 70 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.