மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!
ஆலங்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டையைச் சேர்ந்தவர் துப்பாக்கி முருகன். இவரது மகன் செல்வகணபதி. நேற்றுமுன்தினம் மதுபோதையில் கலிபுல்லா நகர் பகுதியைச் சேர்ந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்யும் நோக்குடன் அரிவாளுடன் விரட்டி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் மண்டலத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் விரட்டி வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.
கொலை செய்ய வந்தவர்கள் திரும்பி சென்றதாக நினைத்துக் கொண்டு அங்கிருந்து 10 மணி அளவில் ஆலங்குடியில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த செல்வகணபதியை அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் ஓட ஓட விரட்டி விநாயகர் கோவில் அருகே வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதில் செல்வகணபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வகணபதியின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அதில் சந்தேகத்திற்கு இடமான 5 க்கும் மேற்பட்டோரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர் மேலும் ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் சிறிய அளவில் நடந்து வந்த குற்றங்கள் இன்று கொலை அளவிற்கு வளர்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை வைக்கின்றனர்.