தமிழகத்தில் அகதிகளாகி பரிதவிக்கும் தமிழர் மீது கரிசனை கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி : மனோ கணேசன்
கடல் கடந்து வாழும் தமிழர்களின் மீதும் கரிசனை கொண்ட அரசு என்ற முறையில், தமிழ் நாட்டில், 108 முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியே சுயமாகவும், வாழ்ந்து கொண்டிருக்க கூடிய இலங்கையிலிருந்து இனக்கலவரங்கள் மற்றும் யுத்தம் காரணமாக குடிபெயர்ந்த தமிழர்களுக்காக, இந்திய ரூபாய் 300 கோடிக்கு மேற்பட்ட நிவாரணங்களையும் அறிவித்து, அவர்களது இந்திய மற்றும் இலங்கை குடியுரிமைகள் குறித்து ஆராய குழுவையும் நியமித்துள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்து, இது தொடர்பில் முழுமையாக தமிழக அரசுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என்பதை அறிவித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவீடர் தளத்திலும் பதிவிட்டுள்ள மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் நேற்று முதல்நாள் சட்டமன்றத்தில் வெளியிட்டார். இதன்போது இலங்கை அகதிகளுக்கு 300 கோடிக்கு மேற்பட்ட நிவாரணங்கள் மற்றும் அகதிகளது இந்திய, இலங்கை குடியுரிமை குறித்து ஆராய குழு நியமனம் ஆகிய இரண்டு அறிவிப்புகளை அவர் செய்துள்ளார். இவை இதற்கு முன்னால் இந்தளவு காத்திரமாக நிகழ்ந்திராத முன்னெடுப்புகள் ஆகும்.
1983-ம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்கள் மற்றும் யுத்தம் காரணமாக தமிழகம் நோக்கி வந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உதவிகளை செய்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். முதல்வரின் அறிவிப்புகள், வீடு, உட் கட்டமைப்பு வசதிகள், கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கை திறன் மேம்பாடு ஆகிய விடயங்களை தழுவி உள்ளன.
மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் மற்றும் வேளாண் பொறியியல் இரண்டு பட்டப் படிப்புகளில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கு, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார். முகாமில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களுக்கான எரிவாயு உருளையுடன் கூடிய அடுப்பு, விலையில்லா அரிசி சமையல் பாத்திரங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முகாமிலும், முகாமிற்கு வெளியேயும் வாழும் தமிழர்களின் எதிர்கால நலன் கருதி, குடியுரிமை பிரச்சினை தொடர்பில், சிறுபான்மையினர் நலன் துறை, வெளிநாட்டு வாழ் நலன் துறை, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், முகாம் தரப்பில் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற சிறப்பான யோசனையையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முகாமிலும், முகாம்களுக்கு வெளியேயும் வாழும் இலங்கை தமிழர்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்றே கொள்கைரீதியாக நாங்கள் விரும்புகின்றோம். ஆனால், 40 வருடங்கள் என்பது மனிதத்துவ கணிப்பில் நியாயமான காலம் என்பதால், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் தலைமுறையாக வாழ்கின்ற அவர்களின் விருப்பம் இதில் முதன்மை பெற வேண்டும் என நாம் நினைக்கின்றோம். இந்த குடியுரிமை விடயத்தில் இந்தியாவில் வாழும் தீபெத்திய அகதிகளுக்கு சமமாக அவர்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் விரும்புகிறோம். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை பெறக்கூடிய யோசனையையும் நம் முன் வைக்கின்றோம்.
இவை அனைத்தையும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஆலோசனைக் குழு கவனத்தில் எடுக்கும் என நாம் நம்புகின்றோம். இது தொடர்பில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருக்கின்றது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.