4வது டெஸ்ட் போட்டியில் ரஹானே இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங் தான். புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய 4 வீரர்களுமே மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். குறிப்பாக புஜாரா – ரஹானே தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அவர்கள் இருவரும் நீக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்பினர்.
ஆனால் புஜாரா 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் பொறுப்பான இன்னிங்ஸ் ஆடியதுடன், 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அருமையாக பேட்டிங் ஆடி 91 ரன்களை குவித்தார். ஆனால் ரஹானே ஸ்கோர் செய்ய திணறிவருகிறார்.
இந்த தொடரில், 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் பொறுப்புடன் ஆடி 61 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். ஆனால் எஞ்சிய 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 34 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
ரஹானேவின் சொதப்பல் பேட்டிங் இந்திய அணிக்கு பாதிப்பாக அமைந்துவரும் நிலையில், அவர் அணியின் துணை கேப்டன் என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், அவரது ஃபார்மை கருத்தில்கொண்டு அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வான், ரஹானே இந்திய அணிக்கு பிரச்னையாக இருக்கிறார். இங்கிலாந்து அணி ஃபார்மில் இல்லாத ஜாக் க்ராவ்லி மற்றும் டோமினிக் சிப்ளியை நீக்கிய பிறகுதான், வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்திய அணி தேவையான மாற்றங்களை செய்வதுதான் நல்லது. தேவையான மாற்றங்களை செய்தால்தான், ஓவலில்(4வது டெஸ்ட் நடக்கும் மைதானம்) இங்கிலாந்து அணி, வேற லெவல் இந்திய அணியை பார்க்கமுடியும்.
ரஹானே துணை கேப்டன் என்பதால் இந்திய அணி நீக்காமல் வைத்திருக்கிறதா? அல்லது கடந்த காலத்தில் அவர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி பெற்று கொடுத்திருப்பதால் வைத்திருக்கிறதா? ஆனால் நிலைத்தன்மையை பொறுத்தமட்டில் அவர் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.