தாலிபன்களின் பத்ரி 313 படைப் பிரிவினர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்க படைகள் காபூல் விமான நிலையத்தை விட்டு முழுமையாக வெளியேறிய பிறகு தாலிபன்களின் பத்ரி 313 படைப் பிரிவினர் விமான நிலையத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.
தாலிபன்கள் காபூலை விழுங்கிய பிறகு காபூலின் பாதுகாப்பை தாலிபன்களின் கமாண்டோ பிரிவு தான் கவனித்துகொள்கின்றன.பத்ரி 313 எனப்படும் இந்த படையினை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தாலிபன்கள் என்றாலே நமது யோசனைக்கு வருவது கையில் ஏகே-47 துப்பாக்கியுடன் நீண்ட குர்தா போன்ற உடை அணிந்து நீண்ட தாடி உடையர்கள் தானே…ஆனால் இந்த பத்ரி படைப் பிரிவில் உள்ள தாலிபன்களை பார்த்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்…
இந்த படையில் உள்ள தாலிபன்களை பார்த்தால் மேற்கு நாடுகளின் உள்ள கமாண்டாே படைப்பிரிவினைப் போலத் தோன்றும்.மேற்கு நாடுகளை போலவே ஆயுதங்கள் மற்றும் தலைக்கவச உடைகள் தரித்திருப்பர்.
தேர்ந்த இராணுவம் போன்ற உடை, இராணுவ காலணிகள், கை மற்றும் கால் பாதுகாப்பு பேடுகள், டாக்டிகல் ரேடியோ, பாதுகாப்பு உடை ,நவீன துப்பாக்கிகள் என நவீன கவச வாகனங்களில் காபூலை சுற்றி திரிகின்றனர்.
இரவு நேரப் பார்க்கும் கருவிகளும் கொண்டிருப்பதால் இவர்கள் இரவில் சண்டையிடும் திறனை பெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவர்களுக்கு எங்கிருந்து இவை அனைத்தும் கிடைத்தன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது.அமெரிக்கா ஆப்கன் படைகளுக்கு வழங்கிய அனைத்து நவீன ஆயுதங்களும் தற்போது இவர்கள் கையில் தானே உள்ளது.28 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா ஆப்கன் படைகளுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்ற தாலிபன் பயங்கரவாதிகளை விட இவர்கள் அதிக சண்டையிடும் திறன் படைத்தவர்களாக உள்ளனர்.ஹக்கானி பயங்கரவாத இயக்கத்திடம் இவர்கள் பயற்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரு இயக்கத்திற்குமான உறவு சமீப காலத்தில் அதிகரித்துள்ளதாகவும் தாலிபன்கள் கட்டமைக்க உள்ள அரசாங்கத்தில் ஹக்கானி இயக்கத்தினரும் பங்கெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பத்ரி படையால் மற்ற நாட்டு கமாண்டோ பிரிவினை சமமாக எதிர்த்து சண்டையிட முடியுமா என்பது சந்தேகமே என்றாலும் தாலிபன்கள் ஒரு நவீன இராணுவத்தை கட்டமைத்து அதன் திறனை அதிகரிக்க உள்ளனர் என்பதை மட்டும் உறுதியாக கூறலாம்.