போக்குவரத்து காவலரின் கன்னத்தில் அறைந்த வடமாநில ஓட்டுநர் கைது : சென்னை
சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்த கனரக வாகனத்தை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்து காவலரின் கன்னத்தில் அறைந்த வடமாநில ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால், மாற்றுச் சாலையில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்து காவலரை வெளிமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று செல்ல முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
லாரியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் மாற்றுச் சாலையில் செல்லும் படி கூறியுள்ளனர். போரூரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியினால் குழுக்களாய் மாறிய சாலைகளால் குழம்பிப்போன வடமாநிலத்தவர் மொழி தெரியாததால் செய்வதறியாது திகைத்து உள்ளார். மேலும் போலீசார் கூறியதை ஏற்க மறுத்து ஓட்டுனர் முஸ்தாக் அகமது என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், போக்குவரத்து காவலரை அறைந்துள்ளார். தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி ஓட்டுநர் முஸ்தாக் அகமது காவலரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து காவலர் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமதை கைது செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது, ஆபாசமாக பேசியது என பின்வரும் 794/21 U/s 294(b), 332, 506 (ii) IPC மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
போரூர் சர்வீஸ் சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்னை கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. மொழி தெரியாத வடமாநில ஓட்டுனரை மனிதாபிமானம் பார்த்து அனுப்பி வைத்திருந்தால் இத்தகைய பிரச்சினை நேரிட அவசியமில்லை, தற்போது சென்னை மெட்ரோ பாலம் பணிகள் போரூரில் நடைபெற்று வருவதால் அனைத்து பாதையும் குறுகலாக இருப்பதால் திகைத்துப்போன வயது முதிர்ந்த அந்த ஓட்டுனர் செய்வதறியாது வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியுள்ளது.