62 ஆயிரத்தைத் தாண்டியது கைதானோர் எண்ணிக்கை.
நாட்டில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 498 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62 ஆயிரத்து 85 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 42 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப் பதிவிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சுகாதார அமைச்சால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 498 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது 42 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மேல் மாகாண எல்லையைக் கடக்க முற்பட்ட 316 வாகனங்களில் பயணித்த 639 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே மேல் மாகாணத்தின் 13 நுழைவாயில்களிலின் ஊடாக மேல் மாகாணத்தினுள் நுழைய முற்பட்ட 489 வாகனங்களில் பயணித்த 1153 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” – என்றார்.