தமிழகத்தில் இன்று மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள் – மாணவர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்கள் வீடுகளில் இருந்து இணையவழியில் படித்து வருகின்றனா். கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும், பிப்ரவரியில் 9 மற்றும், 11 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக 9, 10,11 ஆகிய வகுப்புகளுக்கு மாா்ச் 20-ஆம் தேதியும், பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழக பள்ளிகள் சுத்தம் செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டன. வகுப்பறைகள், கழிவறைகள், இருக்கைகள், நாற்காலிகள், அலுவலக அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனா். 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்படுகின்றனர். தற்போதைக்கு விளையாட்டு நேரம், இறை வணக்கக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படவும் பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
தற்போது 2ஆம் அலையும் முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று முதல் கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவையான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதேபோல கல்லூரிகள் முழுமையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்பட்டுப்பட்டது. மேலும், கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்றும் மாணவர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன.
வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து கல்லூரிகளிலும் கிருமி நாசினி, கைகழுவத் தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், நீண்ட காலத்திற்குப் பின் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதால் எடுத்தவுடன் பாடங்களை நடத்தாமல், உளவியல் ரீதியாக மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சுமார் ஓராண்டிற்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்படுவது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.