டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராகத் தொடர்ந்து 3 சதங்களை ரூட் அடித்ததன் மூலம் தரவரிசையில் இந்த உயர்வை ரூட் பெற்றுள்ளார். இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் தொடங்கும்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த ரூட், 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் உள்பட 507 ரன்கள் சேர்த்து, கோலி, லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்ஸன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது 916 புள்ளிகளுடன் ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் முதலிடத்தைப் பிடித்திருந்த ரூட் 6 ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு அதிகபட்சமாக 917 புள்ளிகளை ரூட் பெற்றிருந்தார். அதைவிட ஒரு புள்ளி குறைவாக தற்போது ரூட் பெற்றுள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீரர்கள் லென் ஹட்டன், ஜேக் ஹாப்ஸ், பீட்டர் மே, டெனிஸ் காம்டன் ஆகியோர் மட்டுமே அதிகமான ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றிருந்தனர். தற்போது ரூட் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ரோரி பர்ன்ஸ் 5 இடங்கள் நகர்ந்து 24-வது இடத்துக்கும், பேர்ஸ்டோ 2 இடங்கள் நகர்ந்து 70-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். டேவிட் மலான் 3 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று 88-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் கோலி முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாகத் தற்போது 6-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா 3-வது டெஸ்ட் போட்டியில் 19, 59 ரன்கள் சேர்த்ததன் மூலம் தரவரிசையில் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தற்போது கோலி 766 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், ரோஹித் சர்மா 773 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். புஜாரா 3 இடங்கள் நகர்ந்து 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரிஷப் பந்த் 4 இடங்கள் சரிந்து 12-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 10-வது இடத்திலிருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் 5-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார், ஒலே ராபின்ஸன் 9 இடங்கள் நகர்ந்து 36-வது இடத்துக்கும், ஓவர்டன் 73-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.