எங்கும் தப்பி ஓட மாட்டோம் என்ற உறுதிமொழியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் வழங்குமாறு பிரேமலதாவுக்கு நீதிபதி உத்தரவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ள நிலையில், உடனிருந்து அவருக்கு உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளதால், பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.

பாஸ்போர்டை புதுபிக்கும் போது, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கடந்த 2017ஆம் ஆண்டு தொடர்ந்த குற்ற வழக்கை மறைத்ததாக கூறி பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி பாஸ்போர்ட் சரண்டர் செய்யப்பட்டது. இதனால், பிரேமலதாவால் விஜயகாந்துடன் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேமலதா சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நெல்லையில் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக கீழ் கோர்ட்டில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை.

பிரேமலதா வழக்கு தொடர்பாக எந்த தகவலையும், மறைக்கவில்லை. வெளிநாட்டில் சிகிச்சை பெறும் அவரது கணவருக்கு உடனிருந்து மனுதாரர் உதவ வேண்டியுள்ளது. எனவே பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். பிரேமலதா எங்கும் தப்பி செல்லமாட்டார் என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், “பிரேமலதாவின் பாஸ்போர்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதேவேளையில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம், வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் தெரிவிப்போம், எங்கும் தப்பி ஓட மாட்டோம் என்ற உறுதிமொழியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் வழங்குமாறு பிரேமலதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் தேமுதிக கழக நிர்வாகிகள் திருமண விழா நடந்தது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

இதன் பிறகு விஜய பிரபாகரன் கூறுகையில், “விஜயகாந்த் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே சென்றுள்ளார். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.