போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு மேலும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16-ம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா. தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதுக்குப் பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு. இருப்பினும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
மேலும் தனக்கு ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் என வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதே காரணத்தை கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நேற்று ,வெளிநாட்டைச் சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.
சிவசங்கர் பாபா மீது இருக்கும் மூன்று போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்த காரணத்தினால், ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து வெளியே வந்த சிவசங்கர் பாபாவை நோக்கி சிவசங்கர் பாபா நல்லவர் எனவும், அவர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், எனவே அவரை விடுதலை செய்யக்கோரி முட்டிபோட்டு அவரது பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பாபாவை சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.