67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மன் மலான் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 121 ரன்னில் அவுட்டானார். ஹென்ரிக்ஸ் 51 ரன்னும், கிளாசென் 43 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் சமீரா, கருணரத்னே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர், மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ஓவரில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 36.4 ஓவரில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சரித் அசலங்கா ஓரளவு தாக்குப் பிடித்து 77 ரன்கள் எடுத்தார். சமிகா கருணரத்னே 36 ரன்னும், டாசன் சனகா 30 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஷம்சி 5 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-1 என சமனிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ஜேன்மன் மலானுக்கு வழங்கப்பட்டது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.