பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்களை மாணவர்கள் தெரிவிக்க மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி அறிவிப்பு பலகையில் வைக்க உத்தரவு
சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாலியல் ரீதியாக மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தெரிவிப்பதற்காக உதவி எண்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.
இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயசீலன் என்ற பாதிரியாருக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார்களை அளிக்க முடியாத நிலையில், சிறுமிகள் இருப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
இந்த விவகாரங்கள் குறித்து ஆய்வுசெய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவைச் சேர்ந்த ஒருவர், சமூக அலுவலர், மனநல ஆலோசகர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துமாறு பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை துணை செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதில், பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி அறிவிப்பு பலகையில் வைப்பது போன்ற பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிகளை மாவட்ட சமூகநலத் துறை செயலாளர், சட்டப்பணிகள் ஆணையத்தைச் சேர்ந்த அலுவலர் ஆகியோர் வாரத்தில் ஒரு நாள் திறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் இடம்பெற்றிருந்தால், அது குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவாகிவரும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் ஆயித்து 544 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அது படிப்படியாக அதிகரித்து 2019ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 396 வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டில் 3 ஆயிரத்து 90 வழக்குகள் பதிவாயின.
இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த குழந்தை உரிமை ஆர்வலர்கள், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.