கேரளாவில் ‘நிபா’ வைரஸால் உயிரிழந்த சிறுவன்! – எவ்வாறு பரவியது தொடர்பில் ஆய்வு
கேரளாவில் நிபா வைரசால் 12 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தொடர்பில் இருந்த 8 பேர் உட்பட, அவன் உண்ட பழத்தின் மாதிரியும் பரிசோதனைக்காக புனேவிற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கோழிக்கோட்டில் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 188 பேர் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், சிறுவனின் தாயாருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராம்புடான் எனும் பழத்தை உண்ட பிறகே சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக, அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த பழத்தின் மாதிரி மற்றும் சிறுவனுடன் தொடர்பில் இருந்த 8 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனே வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வெவ்வேறு மருத்துவமனைகளில் 32 பேர் கண்காணிப்பில் உள்ள சூழலில், கேரளா முழுவதும் 251 பேர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இதனிடையே, நிபா வைரசால் உயிரிழந்த சிறுவனின் வீட்டில், கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, சிறுவனின் குடும்பத்தால் வளர்க்கப்படும், ஆட்டிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. உயிரிழந்த சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு, அந்த ஆட்டிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆட்டிலிருந்து சிறுவனுக்கு, நிபா வைரஸ் பரவியதா என ஆய்வு செய்யப்பட உள்ளது. அப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிமுள்ளதால், அவற்றிடம் இருந்தும் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, நிபா வைரஸ் காரணமாக கேரளா – தமிழகம் இடயேயான போக்குவரத்து ரத்து செய்யப்படாது என, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். வரும் 12ம் தேதி கேரள எல்லை மாவட்டங்களில் மட்டும் 10 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.