தமிழக பள்ளிகளில் தீவிரமடையும் கொரோனா – தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்காங்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று மாலை 3 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு மாணவ-மாணவிகளின் நலன் கருதி அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, கடந்த ஒன்றாம் தேதி முதல் நேரடியாக வகுப்புகள் நடைபெ்ற்று வருகின்றன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 24 மாணவ, மாணவியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தெடர்ந்து, மாணவியுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 103 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவிக்கு அவரின் தந்தை மூலமான தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல, திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவருடன் பயின்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு சோதனை செய்ததில் மாணவியின் தாய்க்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மாணவர்களுக்கு பதிவாகி இருக்கும் தொற்றுக்கூட, பள்ளியில் இருந்து ஏற்படவில்லை என்றும், வெளியில் இருந்துதான் ஏற்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், பாதிப்பு அதிகமானால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும், பள்ளிகளில் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டால் கூட, தொடர்புடைய அனைவருக்கும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்வது, பள்ளியை தற்காலிகமாக மூடுவது, கிருமிநாசினி கொண்டு பள்ளிகள், வளாகம் போன்றவற்றை சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.