நமது கலாச்சாரத்தில் மொழி ஒரு மிக முக்கியமான அம்சம் – வெங்கையா நாயுடு
நமது கலாச்சார பாரம்பரியத்தில், மொழி ஒரு மிக முக்கியமான அம்சம் என்றும் கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். மொழிதான் நமக்கு அடையாளம் எனவும் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் நவீன கல்விக்கான மோட்டூரி சத்தியநாராயணா மையத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், சென்னை கிண்டி ராஜ்பவனில் இருந்து ஆன்லைன் மூலம் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். அப்போது, அந்த மையத்தை திறந்துவைத்துப் பபேசினார். அப்போது அவர் , மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரும், தோழருமான மோட்டூரி சத்யநாராயணா, வாழ்க்கையின் அனைத்து மட்டத்திலும் இந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியவர்களில் முக்கியமானவர் ஆவார்.
இந்தி மொழியை தென்னிந்தியாவில் பரப்புவதை தமது வாழ்நாளின் முக்கியப் பணியாக கருதி செயல்பட்டு வந்ததுடன், பல்வேறு வெளியீடுகள் மூலம், அவரது தாய்மொழியான தெலுங்கையும் ஊக்குவித்து வந்தார். தெலுங்கு மொழி சமிதியின் நிறுவன செயலாளராகவும் அவர் இருந்தார். இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவேண்டும். குறிப்பாக, நமது தாய்மொழிக்கு, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.
நமது கலாச்சார பாரம்பரியத்தில், மொழி ஒரு மிக முக்கியமான அம்சம் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். மொழி தான் நமக்கு அடையாளம், சுயமரியாதையை வழங்குவதோடு, நாம் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவேதான், உங்களது தாய்மொழியில் பேசுவதை பெருமையாகக் கருதுங்கள் என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன்.
புதிய தேசிய கல்விக்கொள்கை-2020 ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஆவணம் என்பதோடு, பரவலான கலைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, நவீன காலத்துக்கு ஏற்ப கல்வியில் பன்முக அணுகுமுறையை பின்பற்றுவதிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்திய கல்வி முறையை பிரித்தெடுத்து, ‘தொழில்ரீதியான மற்றும் தாராள கல்வி’ முறைகளுக்கு இடையிலான கடினமான மற்றும் செயற்கைத் தடைகளை தகர்த்தெறிவதே இதன் நோக்கம்.
குழந்தைகளிடம், அவர்களது இளமை பருவத்தில் இருந்தே கலை, இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்குமாறு பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறேன். நாட்டில் உள்ள தலைசிறந்த அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, மொழிப்பாடங்கள் மற்றும் சமூக அறிவியல் போன்ற அத்தியாவசியப் பாடங்களை படிப்பதை நாம் புறக்கணித்து விடுகிறோம்.
மேலும், குருட்டுப்பாடமாக படிப்பது, குழந்தைகளின் படைப்பாற்றலைச் சிதைத்துவிடும். மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகாணக்கூடிய பொறியியலாளர், மருத்துவர் மற்றும் விஞ்ஞானிகளை நாம் உருவாக்கவேண்டும் என்று கூறினார்.