தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்க கூட்டமைப்பைப் பலப்படுத்துங்கள்! – ஆனோல்ட் வேண்டுகோள்

“இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கிய தேர்தல் களமாக அமைந்துள்ளது. தமிழ் மக்களின் எதிர்கால பலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக அமையப் பெற்றிருப்பதால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனோல்ட் ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“எமது மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி வந்திருக்கின்றார்கள். நாம் தற்போது நாட்டிலுள்ள அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்றபோது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கடந்த நாடாளுமன்றத் காலத்தில் மக்கள் நலன்சார் பல்வேறு விடயங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருக்கின்றது. அதன் தொடராக எமது நீண்டகால கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னர் பலப்படுத்தியதைப் போன்று மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான பயணத்தை முன்னெடுப்பதற்கு மக்கள் மீண்டும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அதிகளவான உறுப்பினர்களின் பலத்துடன் கூட்டமைப்பு நாடாளுமன்றம் செல்கின்ற போதுதான் எம்மால் பேரம் பேச முடியும். எமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த முடியும்.

தென்னிலங்கையில் கூட்டமைப்புக்கு எதிராகவே பேசப்படுகின்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக வடக்கு, கிழக்கில் அரசின் முகவர்களாகக் களமிறக்கப்பட்டிருப்பவர்களும் அதனையே மேற்கொண்டு வருகின்றனர். இது எமது மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்க வழிவகுக்கும்.

எனவே, தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பாதையில் மக்கள் நலன் சார்ந்து தொடர்ச்சியாகச் செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழமை போன்று இம்முறையும் தமது வாக்குகளை வழங்கி தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என்பதை நாட்டுக்கும் – சர்வதேசத்துக்கும் சொல்ல வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். அதுவே தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உரிய ஒரே ஒரு தெரிவாகும்” – என்றார்.

Comments are closed.