தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி – யார் இவர்…? முழு பின்னணி

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஆர்.என்.ரவி தற்போது வரை நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக மாற்றப்பட்டுள்ளதால் விரைவில் பொறுப்புகளை ஏற்பார் என்று தெரிகிறது.

நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வந்த ஆர்.என்.ரவி, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் தமிழ்நாடு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிரந்தர ஆளுநராக பஞ்சாப் செல்கிறார். ஏற்கனவே பஞ்சாப் பொறுப்புஆளுநராகவும் சண்டிகர் நிர்வாகியாகவும் அண்மையில் நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித் தற்போது நிரந்தரமாக அங்கு செல்கிறார்.

யார் இந்த ஆர்.என். ரவி?

1952ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவி. இவர் கேரள மாநில கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவர். 1976ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி. கேரளாவில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

கேரள ஐபிஎஸ் அதிகாரி

ஆர்.என்.ரவி. 2012 இல் புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனராக ஓய்வு பெற்றார். அவர் 2014 முதல் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தார். 5 அக்டோபர் 2018 அன்று இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அமைதி ஒப்பந்தம்

ஆகஸ்ட் 2015 இல் நாகலாந்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையேயான முக்கிய கட்டமைப்பு ஒப்பந்தம் இவரது பணி காலத்தில் தான் நடந்தது. 1997 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் இப்பகுதியில் அமைதியை அடைய இந்த ஒப்பந்தம் பெரிய முன்னேற்றமாகும்.

நாகலாந்து

நாகலாந்து மாநில ஆளுநராக கடந்த 2019ம் ஆண்டு ஜுலை 20தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமனம் செய்யப்பட்டார் . கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு ஆளுநராக சிறப்பாக பணியாற்றி வந்த ஆர.என்.ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பஞ்சாப் பொறுப்புஆளுநராகவும் சண்டிகர் நிர்வாகியாகவும் அண்மையில் நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், தற்போது நிரந்தரமாக அங்கு பொறுப்புக்கு செல்கிறார்.

ஆளுநருக்கு வாழ்த்து

இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என்று கூறியுள்ளார்.

இதேபோல் பஞ்சாப் ஆளுநராகி உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர்.இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.