தமிழகம் உள்பட 7 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4 இடைத் தேர்தல்
தமிழகம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், அஸ்ஸôம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத் தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
மேலும், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த என்.கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, அந்த இடத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகிய இருவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, கடந்த மே 7-ஆம் தேதி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். இதுபோன்று மத்திய அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் பதவியை ராஜிநாமா செய்தார். அவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, தான் பதவி வகித்த மத்திய பிரதேச மாநிலங்களவை இடம் காலியானது. இதேபோன்று மேற்குவங்கம், அஸ்ஸôம் போன்ற மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் ராஜிநாமா செய்தனர். மேலும், மகாராஷ்டிர உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததால் மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணன் அக்டோபர் 6- ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், இந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஒரே காலத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடை பெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தலுக்கானஅறிவிப்பு செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 22-ஆம் தேதி. வேட்பு மனுக்கள் செப்டம்பர் 23- ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 27-ஆம் தேதியாகும். புதுச்சேரியைத் தவிர மற்ற மாநிலங்களில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் பதவிக் காலம் ஏற்கெனவே பதவி வகித்த உறுப்பினர்களின் பதவிக் காலத்துக்கு உள்பட்டவையாகும். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.