கொரோனாவுக்கு மத்தியிலும் ஓகஸ்ட் 5,040 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை!
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறைக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆயிரத்து 40 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அதிகளாவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த மாதமே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் 1,497 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதத்தில் 1,614 சுற்றுலாப் பயணிகளும், ஜூலை மாதம் 2 ஆயிரத்து 429 தொற்றாளர்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 377 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
எனினும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி காணப்படுகின்றது.
கடந்த மாதம் கனடாவிலிருந்தே அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகள், ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.