ராஜபக்சக்களை மூன்றாவது தடவையும் தோல்வியடைச் செய்ய எம்மால் முடியும் – பாட்டலி சம்பிக்க
“ராஜபக்சக்களின் ஆட்சியை இல்லாதொழிப்பதற்கான பிரதான திறப்பு எங்களிடமே இருக்கின்றது. நாட்டு மக்களுக்காக இரு தடவைகள் ராஜபக்சக்களை தோல்வியடைச் செய்தது போன்று மூன்றாவது தடவையும் அவர்களைத் தோல்வியடையச் செய்ய எமக்கு முடியும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கெஸ்பேவ பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ராஜபக்சக்களை வீழ்த்துவது உங்களது நோக்கம் என்றால் அதற்கான பிரதான திறப்பு எம்மிடம்தான் இருக்கின்றது. அது தொடர்பில் அனுபவம் பெற்றவர்களும் நாங்களே.
கடந்த 2015ஆம் ஆண்டு நாங்கள் ராஜபக்சக்களின் ஆட்சியை வீழ்த்துவதாகத் தெரிவித்து களமிறங்கியது போன்று, அதனை நிறைவேற்றியும் காண்பித்தோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மக்கள் வழங்கிய ஆணைக்குப் புறம்பாகச் செயற்பட்டனர்.
எம்மை சுற்றியிருந்த அரசியல்வாதிகள் மாத்திரமின்றி அதிகாரிகள்கூட ‘டீல்’ செய்துகொண்டு திருடர்களைப் பாதுகாத்தனர். இதன்போது மக்கள் திருடர்களை விரட்ட வந்த அரசை திருடர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிவித்து வந்தனர்.
52 நாட்கள் அரசியல் நெருக்கடியின்போது ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக அவருடன் நாங்களே இருந்தோம். இன்று அவருடன் பச்சை நிற ஆடைகளை அணிந்துகொண்டு திரியும் அனைவரும் அன்று மைத்திரிபால சிறிசேனவுக்கே தங்களது ஆதரவைப் பெற்றுக்கொடுத்திருந்தனர்.
ரணில் விக்கரமசிங்கவின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட நம்பிக்கைக்காக அல்ல, நாட்டின் ஜனநாயகத்துக்கு, அரசமைப்புக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலே நாங்கள் அந்தச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம்.
அதேபோன்று ராஜபக்சக்களை தோல்வியடையச் செய்து எம் முன்னால் அவர்களை மண்டியிடச் செய்தோம். புதிய அரசையும் உருவாக்கினோம். அதனால் ஒரு தடவை அல்ல இரு தடவைகள் நாங்கள் ராஜபக்சக்களை தோல்வியடையச் செய்துள்ளோம்.
ராஜபக்சக்களோ, ஐக்கிய தேசியக் கட்சியினரோ நாங்கள் செயற்றிறன் அற்றவர்கள் என்று எம்மை விமர்சித்ததில்லை. அவன்காட் மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஸ எமக்கு எதிராக நான்கு ஆணைக்குழுக்களை அமைத்துள்ளார்.
எம் மீது விசாரணைகளை மேற்கொண்டு சிறையில் அடைப்பதே அவர்களின் நோக்கம். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். இதனூடாக மஹிந்தவுக்கு நாங்கள் ஒரு விடயத்தைத் தெரிவிக்க விரும்புகின்றோம். நாம் எப்போதுமே பின்வாங்கியதில்லை. நீங்கள் உங்களது வரலாற்றை நினைவுபடுத்துங்கள். முல்கிரிய சம்பவம் தொடக்கம் ரகர் விளையாட்டு வீரர் தாஜூதீனின் கொலை வரை உங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்கு விசாரணைகள் ஆகியவற்றை நினைவில் வைத்திருங்கள்.
போரின்போது நீங்கள் எவ்வாறு அஞ்சியிருந்தீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஒரு தடவையல்ல மூன்றாவது தடவையாகவும் நாட்டு மக்களின் நன்மைக்காக ராஜபக்சக்களைத் தோல்வியடையச் செய்ய எமக்கு முடியும்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது, ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தலையாட்டிக் கொண்டிருக்கவோ, ‘டீல்’ செய்துகொள்ளவோ, தமது சகாக்களுக்கா நாட்டின் வளத்தை உறிஞ்சி எடுக்க சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்கவோ, சர்வதேச மற்றும் தேசிய நயவஞ்சகர்களுக்கு நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கோ அல்ல. இந்த நாட்டை எமது எதிர்கால சந்தியினருக்கு ஒழுங்கான முறையில் பாதுகாத்து ஒப்படைக்கவே.
நாங்கள் மகுடம் சூட்ட எண்ணுவது நாட்டிலுள்ள கல்விக்கற்ற சமூகத்துக்கே. இதற்கு வடக்கு ,தெற்கு ,கிழக்கு என்ற பேதம் எமக்கில்லை. அதனால் உங்களது சக்தியை எமக்குப் பெற்றுக்கொடுங்கள். அதனைக் கொண்டு ராஜபக்சக்களுக்கு சிறந்த பாடத்தைக் கற்பிக்க விரும்புகின்றோம். அவர்கள் மீது நாங்கள் தனிப்பட்ட குரோதத்தைக் கொண்டிருக்கவில்லை.
அவர்கள் நாட்டுக்கு இந்தக் குறுகிய காலத்துக்குள் செய்துள்ள பாதிப்புகள் தொடர்பில் உங்களுக்கே தெரியும். அதேபோன்று கடந்த காலங்களில் இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களும், எத்தனோல் கடத்தல்காரர்களும் இந்தக் கூட்டத்தினருடனே இணைந்துகொண்டுள்ளனர். இவர்களை விரட்டவே நாம் பலத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” – என்றார்.
Comments are closed.