நாளை நடக்கவுள்ள இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு – வினாத்தாள் கசிவு?
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு மாணவர் அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மே மாதத்தில் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எனினும் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது.
அதன்படி, நாடு முழுவதும் நாளை நீட் தேர்வை மாணவர்கள் எழுதவுள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணிவரை தேர்வு நடைபெறும். தேர்வுக்கான இறுதிக்கட்ட தயாரிப்புகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.
இதையடுத்து, சமூக ஊடகத்தில் பலரும் #operationNeet என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்துகளை பதிவிட தொடங்கினர். அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) ஆகியவை இந்த விவகாரத்தில் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன. நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன.
எனினும், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று அதிகாரிகள் மருத்துள்ளனர். “இது போலியானது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், ” என்று கூறியுள்ள அதிகாரிகள் பாதுகாப்பு அமைப்புகளில் முறைகேடு அல்லது மீறல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு நீட் வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.