பொதுத்தேர்தலுக்கு வீடு திரும்ப விசேட போக்குவரத்து வசதிகள்!- ஆகஸ்ட் முதல் வாரத்தில் நீண்ட விடுமுறை
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்காக, போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஆகஸ்ட் 03ஆம் திகதி திங்கட்கிழமை பௌர்ணமி தின விடுமுறையாகையால், அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை கிடைப்பதால், இம்மாதம் 31ஆம் திகதி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், இவ்வாறு செல்வோருக்கு நெரிசல் இல்லாமல், கொரோனா வைரஸ் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, போக்குவரத்து சேவைகளை வழங்குவதே தமது நோக்கம் எனவும் அமைச்சர் கூறினார்.
இதற்கமைய, மேலதிகமாக 600 தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், இ.போ.சவினால் அவர்களிடமுள்ள அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ரயில் திணைக்களத்துக்குச் சொந்தமான அனைத்து ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்துவதோடு, சில சேவைகளை மேலும் பல நகரங்கள் வரை நீடிக்கவும், விசேட ரயில் சேவைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இம்மாதம் 31ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவானோர் கொழும்பிலிருந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாலும், அவர்கள் ஓகஸ்ட் 07ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பு இருப்பதாலும், அக்காலப்பகுதிகளினுள் நெரிசல் இல்லாமல் பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்து சேவைகள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ், புதிய பஸ்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கல், பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் தொற்றுநீக்கம் செய்தல் உள்ளிட்ட போக்குவரத்து கண்காணிப்புகளை, பணிக்குழு தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளது.
ஆயினும், எதிர்வரும் பொதுத் தேர்தல் காரணமாக கிராமப்புறங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இ.போ.ச., ரயில் திணைக்களம் ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Comments are closed.