கோவாக்ஸின்: மனிதர்கள் மீதான பரிசோதனை தமிழ்நாட்டில் துவங்கியது

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதிக்கும் பரிசோதனை இன்று துவங்கியுள்ளது. இதன் முடிவுகள் முழுமையாகத் தெரியவர ஆறு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாக்ஸின் என்ற கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பு மருந்தை சோதிக்க இந்தியாவில் 12 மையங்கள் தேர்வுசெய்யப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதற்கெனத் தேர்வுசெய்யப்பட்டது.

இதையடுத்து, கோவாக்ஸினுக்கான முதற்கட்ட பரிசோதனை இன்று துவங்கியது. இதற்காகத் தேர்வுசெய்யப்பட்ட இரண்டு தன்னார்வலர்கள், அந்த தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டனர். அவர்களுக்கு 5 மிலி என்ற அளவில் மருந்து செலுத்தப்பட்டது.

அந்த மருந்தை போட்டுக்கொண்ட பிறகு, சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாத நிலையில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். பிறகு வாராவாரம் அவர்களது உடல்நிலை பரிசோதிக்கப்படும்.

14வது நாளில் மீண்டும் ஒரு முறை இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும். இதற்குப் பிறகு 28வது நாள், 42வது நாள், 102வது நாள், 109வது நாள்களில் அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியிருக்கிறதா என்பதும் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது என்பதும் கண்காணிக்கப்படும்.

“முதலில் இந்த மருந்தின் பாதுகாப்பு சோதிக்கப்படும். இதற்குப் பிறகு மருந்தின் திறன் சோதிக்கப்படும். இதற்குப் பிறகு பெரும் எண்ணிக்கையில் மனிதர்கள் மீது சோதனை நடத்தப்படும். அதற்குப் பிறகே இந்த மருந்தின் திறன் என்பது உறுதிப்படுத்தப்படும்” என எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுந்தரம் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சோதனைகள் முழுமையாக முடிவுக்குவர 6 மாதங்கள் வரை ஆகலாம். அந்த காலகட்டத்தில் நல்ல விளைவுகள் தென்படும்பட்சத்தில், மருந்தின் உற்பத்தி துவக்கப்படும்.

கோவாக்ஸினுக்கான இந்த சோதனையில் 18லிருந்து 55 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கர்ப்பிணிப் பெண்களும் வேறு நோய்கள் உள்ளவர்களும் இதில் பங்கேற்க முடியாது.

Comments are closed.