நாட்டையே உலுக்கிய 6 வயது சிறுமி வல்லுறவு வழக்கு! தண்டவாளத்தில் சடலமாக கிடந்த கொலையாளி
தெலங்கானா மாநிலத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபரின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியைச் சேர்ந்த சிறுமி கடந்த வாரம் காணாமல் போனார். அடுத்த நாள், பக்கத்து வீட்டில் படுக்கை விரிப்பில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்டது. சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்ட வீட்டின் உரிமையாளர் பல்லகொண்ட ராஜு இந்த சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவானார்.
இதையடுத்து, அவரை தீவிரமாக போலீஸார் தேடி வந்தனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். தெலங்கானா மாநில தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டி, குற்றவாளியை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை ஜனாகான் மாவட்டத்தில் கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில் தண்டவாளத்தில் பல்லகொண்ட ராஜு சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலில் இருந்த பச்சையை வைத்து அது பல்லகொண்ட ராஜுவின் சடலம் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இது தொடர்பாக அங்கிருந்த பணியாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தானும் மற்றொரு தொழிலாளரும் பணியில் ஈடுபட முயன்றபோது, தங்களை பார்த்து ஒருநபர் புதர்களுக்குள் ஒளிந்துகொண்டதாகவும் 10 நிமிடங்கள் கழித்து அவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தெலங்கானா போலீஸ் டிஜிபி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஐதராபாத் சிங்கனேரி காலனியில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர், கான்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ரெயில்வே இருப்புப் பாதையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலைக் கைப்பற்றி உடலின் அடையாளங்களை வைத்துச் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.