வீதிகளில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் அவலம்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் சரிந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளும் உதவியை நிறுத்திவருவதால் அங்குள்ள மக்கள் பட்டினியாலும், பணமில்லாமலும் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை தெருக்களில் கொண்டு வந்து போட்டு விற்பனை செய்து, குழந்தைகளுக்கு உணவு வாங்க வேண்டிய நிலைக்கு காபூல் நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தலிபான்களுக்கு அஞ்சி வங்கிகள் பூட்டப்பட்டதால், தாங்கள்சேமித்த பணத்தைக்கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாத நிலைக்கு காபூல் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காபூல் நகரிலிருந்து பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதாலும், வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படுவதாலும், மக்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறத் தொடங்கிவிட்டது.
காபூலின் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதியில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திவரும் தரைவிரிப்புகள், பிரிட்ஜ், எல்.இ.டி. டி.வி., உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஏதாவது கிடைத்தால் போதும் குழந்தைகளை காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் வீட்டுப் பொருட்களை விற்கும்நிலைக்கு ஆப்கன் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காபூல் நகரவாசி ஒருவர் கூறுகையில்
“ என்னுடைய வீட்டு உபயோகப் பொருட்களை பாதிக்கும் குறைவான விலைக்கு விற்றேன். 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய குளிர்சாதனப் பெட்டியை 5ஆயிரத்துக்கு விற்றேன். குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்களே சாப்பாடு கொடுக்க வேண்டுமே,” என கவலையுடன் தெரிவித்துள்ளார்.
காபூல் நகரை தலிபான்கள் கைப்பற்றியவுடன் வெளிநாட்டு உதவிகள் கடந்த மாதம் 15ம் திகதியுடன் நிறுத்தப்பட்டன. அமெரிக்கா 9,400 கோடி டாலர்கள் ரிசர்வ்வை வங்கியிலிருந்து நிறுத்தி வைத்தது. சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவையும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்திவிட்டன. தலிபான்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என 39 நாடுகளைக் கொண்ட நிதி தடுப்புக் குழுவும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கன் குழந்தைகள் சிறுவர்கள், சிறுமியர், இளம் பெண்கள், வயதானவர்கள் உண்ண உணவின்றி தவித்து வருவதால் மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு உணவு வழங்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.