உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகளின் மாற்றம்?
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை இவ்வருடத்தில் நடத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரு பரீட்சைகளுக்காக மாத்திரம் சுமார் 8 இலட்சம் மாணவர்கள் தோற்றவுள்ளனர். எனினும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக விண்ணப்பங்கள் முறையாக நிரப்பப்படவில்லை என்றும், பாடவிதானங்கள் பூர்த்தியாக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக 8 இலட்சம் மாணவர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்த இரு பரீட்சைகளையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டமானது 69 நாட்களைக் கடந்துள்ளது. இதனால் பாடத்திட்டங்களை நிறைவுசெய்ய முடியாதது மற்றும் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு அதிபர்கள் புறக்கணிப்பது போன்ற செயற்பாடுகளினால் இந்த இரு பரீட்சைகளையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் பட்சத்தில் இவ்வருடத்தில் இந்த இரு பரீட்சைகளையும் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.