பாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி தலைமையிலான கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயலணி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை உலகளாவிய ரீதியில் கடந்த 18 மாதங்களாக முடக்கல் நிலை நீடிக்கப்பட்டு வருவதால் 77 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்றும், இது அவர்களது எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.