தனது செல்லப்பிராணி ஆடம்பரமாக பயணம் செய்வதற்காக முழு விமானத்தையும் புக் செய்த உரிமையாளர்!

மும்பை சேர்ந்த நாய் உரிமையாளர் ஒருவர் தனது செல்லப்பிராணி ஆடம்பரமாக பயணம் செய்வதற்காக ஏர் இந்தியா விமானத்தின் முழு வணிக வகுப்பு அறையை பதிவு செய்து அழைத்து சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டாக்ஜோ என்ற நாயை வளர்த்து வரும் உரிமையாளர் மும்பையில் இருந்து சென்னைக்கு அதனை அழைத்துச் செல்ல ஏர் இந்தியாவில் ஒரு முழு வணிக வகுப்பை முன்பதிவு செய்து அதனுடன் பறந்துள்ளார். இந்த வணிக வகுப்பை முன்பதிவு செய்ய ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். மும்பையில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பு ஒரு இருக்கை ரூ .20,000 ஆகும். எனவே அவர் மொத்த இருக்கைகளையும் புக் செய்ததால் 2.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்பதிவு செய்ததையடுத்து அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டி கடந்த புதன்கிழமை அதிகாலை ஏர் இந்தியா விமானமான ஏஐ -671ல் ஏறி மும்பையில் இருந்து சென்னைக்கு இரண்டு மணி நேரம் குதூகலமாக பறந்து வந்துள்ளது. ஏர் இந்தியா ஏ 320 விமானத்தில் உள்ள ஜே-கிளாஸ் கேபினில் 12 இருக்கைகள் உள்ளன. இதனால் செல்லப்பிராணி வசதியாக பறந்தது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா புகைப்படத்தை ஷேர் செய்து மேற்கோள் காட்டியுள்ளது.

உள்நாட்டு செல்லப்பிராணிகளை பயணிகள் அறையில் அனுமதிக்கும் ஒரே இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியா. ஒரு பயணி இரண்டு செல்லப்பிராணிகளுடன் பயணிக்கலாம் என்பதால் நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற சிறிய செல்லப்பிராணிகள் அவற்றின் உடல்நிலையை சரி பார்த்து மற்றும் ரேபிஸ் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிப்பதை பொறுத்து விமானத்தில் அனுமதிக்கப்படுகிறது.

ஒரு விமானத்தில் அதிகப்பட்சம் இரண்டு செல்லப்பிராணிகளுடன் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே, ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களில் 2,000 செல்லப்பிராணிகள் பயணம் செய்துள்ளன. பொதுவாக செல்ல பிராணிகள் விமானத்தின் கடைசி இருக்கைகளில் இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால் ஏராளமானோர் தங்கள் செல்லப்பிராணிகளை அழைத்து சென்று வருகின்றனர்.

ஆனால் ஏர் இந்தியா வணிக வகுப்பில் இதற்கு முன்னர் நாய்கள் பயணம் செய்துள்ளபோதும் ஒரு முழு வணிக அறையை செல்லப்பிராணிக்காக முன்பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான பயணிகள் தங்கள் செல்லப்பிராணிகளை விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

முன்னதாக பெண் ஒருவர், தனது செல்லப் பிராணியான கங்காருவை விமானத்தில் அழைத்து சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சன் இங்கிலாந்தின் அறிக்கையில் ஈஸ்டர் என்ற வான்கோழி தனது உரிமையாளர் ஜோடி ஸ்மாலியுடன் விமானத்தில் சென்றதை குறிப்பிட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.