இந்திய ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார் மொறகொட!
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் மிலிந்த மொறகொட இன்று தலைநகர் புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தனது நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சால் உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி காணொளி வடிவில் ஒளிபரப்பு செய்யக்கூடிய விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இந்திய ஜனாதிபதி அவரது உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளிவிவகார அமைச்சுடன் இணைந்துகொண்டதையடுத்து, அவரிடம் மிலிந்த மொறகொட நற்சான்றுப்பத்திரத்தைக் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் இந்திய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் மிலிந்த மொறகொட, இந்தியத் தூதுக்குழு செயற்திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.