சமவுரிமையை ஏற்பவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயார் : சிவசக்தி ஆனந்தன்
சமவுரிமையுடன் வாழ்வதை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாருடைய அரசு ஆட்சியில் இருக்கின்றது என்பது கேள்வியல்ல. யார் எம் தேசிய இனமும் இந்நாட்டின் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று நினைக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயார். அந்த அங்கீகாரத்தை ஏற்காதவரை எமது போராட்டமும் தொடரும்.
எமது நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் எமக்குரிய அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். இதற்குச் சாக்குப்போக்குச் சொல்லும்வரை இந்த நாடு முன்னேறுவதற்கு இடமில்லை
அரசியல் உரிமையும் அதிகாரமும் இல்லாமல் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இராஜதந்திர தோல்வியை மூடிமறைப்பதற்காக தற்போது அரசியல் தீர்வுக்கு எத்தனைகாலம் எடுக்கும் என்பது தெரியாது. அதுவரையில் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியைப் பிற்போட முடியாது என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களை திசைதிருப்பும் நோக்கில் அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் ஆணை தாருங்கள் என்று இத்தேர்தல் பரப்புரைகளில் கூறிவருகின்றது. ஆனால், நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுக்கும் போதும் அந்த அரசின் பாதுகாப்பு செலவுக்கு இரட்டிப்பு தொகை ஒதுக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்துக்கும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்தபோதும் ஏன் அபிவிருத்தி குறித்து கூட்டமைப்பு பேசவில்லை?
எமக்கான அதிகாரப்பகிர்வை வழங்கவே முடியாது என்று இன்றைய ஆட்சியாளர்கள் கூறுவதிலிருந்து எமக்கு உரித்துடைய அரசியல் உரிமையைத் அவர்கள் பறித்து வைத்திருக்கின்றார்கள் என்பதும் தெளிவாகின்றது. இதற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்ட வேண்டிய சூழலில், இதற்கான கட்டமைப்பை ஏற்கனவே கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடமையைச் செய்யாமல் விட்டதை மறைப்பதற்கே இன்று அபிவிருத்திப் போர்வையை போர்த்துக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கின்றது.
இதுவரை காலமும் கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக உருவாக்குவதற்காகவும் மக்களின் அபிலாஷைகளை மக்களின் பங்களிப்புடன் முன்னெடுப்பதற்காகப் போராடிய நாம், அந்த முயற்சி பலனளிக்காமையால் இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து கூட்டமைப்பு செய்யத் தவறிய விடயத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகின்றோம். எனவே, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்கள் ஆதரவைச் சிந்தாமல் சிதறாமல் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மீன் சின்னத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” – என்றார்.
Comments are closed.