பிக்குகள் வங்குரோத்து தனமான பேச்சுக்களை நிறுத்த வேண்டும் அப்போதே ஒருமித்த நாடு சாத்தியம் – சுரேஷ் பிரேமசந்திரன்

இந்த நாடு ஒருமித்த நாடாகவும் எல்லா இனத்தவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் புத்த பிக்குகள் தங்களுடைய வங்குரோத்து தனமான பேச்சுக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
வடமராட்சியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் 11 நாட்களுக்குள் பாரிய மாற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நீண்ட போராட்டத்தினை நடத்தியவர்கள். அந்த போராட்டத்திற்கான தலைமையை உருவாக்கிய பெருமை வடமராட்சி மண்ணை சாரும். தமிழ் மக்களை உலக நாடுகள் எல்லாம் அறிந்து வைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் முப்படைகளைக் கொண்டு நாம் நடத்திய விடுதலைப் போராட்டமாகும்.
தமிழ் மக்கள் கௌரவமாக சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக இந்த நாடு பாரிய போராட்டங்களை சந்தித்துள்ளது. ஆனால் இன்றும் கூட அரசாங்கம் சமத்துவமான உரிமைகளை கொடுப்பதற்கு தயாராக இல்லை. தாங்கள் போடுகின்ற பிச்சையை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சில பிக்குமார் கூறுகின்றனர். தாங்கள் கொடுப்பதை தமிழர்கள் ஏற்க வேண்டும் என தென்பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர். நீங்கள் கொடுப்பதை வேண்டுவதற்கு நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்கள் உரிமையை கேட்கின்றோம். எங்கள் மொழியை பேசுவதற்கு கேட்கின்றோம்.
தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசினால் எங்களை இனவாதிகள் என்கிறார்கள். எமது தேவைகள் பற்றி பேசினால் எங்களையும் பிரபாகரன் என்கிறார்கள். புத்தர் சரணம் கச்சாமே என புத்தரின் போதனைகளை போதித்துக் கொண்டு இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவது பிக்குகளுக்கு அழகில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Comments are closed.