தேர்தல் முறைமை தொடர்பில் தமுகூ, ததேகூ, ஸ்ரீலமுகா ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன.
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, மனித உரிமை மீறல் சம்பவங்கள் ஆகியவை ஏற்படுத்தும் சந்தடிகளின் மத்தியில் தந்திரமாக தேர்தல் முறையை விகிதாசாரத்தில் இருந்து கலப்பு முறைக்கு ஒட்டுமொத்தமாக மாற்றி, குறிப்பாக தமிழ் பேசும் மக்களினதும், சிறு கட்சிகளினதும் இருப்புகளை இல்லாதொழித்து, இந்நாட்டை இரண்டு பெரிய கட்சிகளுக்கு மட்டும் உரிய நாடாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன.
இப்பின்னணியில் இன்று, தேர்தல் சீர்திருத்த விவகாரத்தில், “விகிதாசார முறைமைமை விட்டுக்கொடுக்க முடியாது” என்ற பொது நிலைப்பாட்டில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தமிழ், முஸ்லிம் கட்சிகளும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
ஏனைய தமிழ், முஸ்லிம் மற்றும் பெரும்பான்மை கட்சிகளுடனும் பேசி வருகிறோம்.
அதேவேளை ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்களை, முன்னுரிமை கொடுத்து, விகிதாசார முறையின் கீழ் நடத்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் நாம் இருக்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழுவின் அங்கத்தவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
அரசியல் பரப்பில் இன்று முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
தேர்தல் சீர்திருத்த விவகாரத்தில், “விகிதாசார முறைமையை ஒட்டுமொத்தமாக மாற்ற இடமளிக்க முடியாது” என்ற பொது நிலைப்பாட்டில் இன்று, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், விகிதாசார முறைமையை மாற்ற இடமளிக்க முடியாது என்ற தமது நிலைப்பாட்டை தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில் தெளிவாக அறிவித்து விட்டது.
இவ்விவகாரம் பற்றி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சி பிரதிநிதிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளேன்.
இதுபற்றிய தங்கள் நிலைப்பாட்டை இக்கட்சிகள் இன்னமும் தெரிவிக்கவில்லை.
அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருடனும் இதுபற்றி நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.
அரசாங்கத்தின் ஏனைய சிறு கட்சிகளுடனும், மக்கள் விடுதலை முன்னணியுடனும் (ஜேவிபி) நாம் கருத்துகளை கலந்து பேசி உள்ளோம்.
பாராளுமன்றத்தில் இடம்பெறும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, எம்பி அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், எம்பி சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகிய கட்சிகளுடனும் பேச உள்ளேன். ராஜாங்க அமைச்சர் அமல் வியாலேந்திரனுடனும் கலந்துரையாடியுள்ளேன்.
இந்த அனைத்து கட்சிகளும், அரசாங்கம், எதிரணி பேதங்களுக்கு அப்பால் தமது கட்சிகளின் இருப்புகளையும், நமது மக்களின் இருப்புகளையும் உறுதிப்படுத்த ஒருமித்து நிற்க உடன்படுவார்கள் என நம்புகிறேன்.
அதேவேளை ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்களை, முன்னுரிமை கொடுத்து, நடத்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்.
இதுபற்றிய உத்தரவாதத்தை சர்வதேச சமூகத்திடம் ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் தந்துள்ளார்கள்.
உடனடியாக தேர்தலை நடத்துவதானால், தேர்தல் முறை சீர்திருத்தத்தை கைவிட்டு, பழைய விகிதாசார முறையின் கீழேயே மாகாணசபை தேர்தல்களை அரசாங்கத்தால் நடத்த முடியும்.