9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் கிராம ஊராட்சித் தலைவர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது.
கடந்த 23ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களான காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 97,831 பேர் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,676 பேரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.