கர்நாடக மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநரை பழிவாங்க 22 கிமீ பயணம் செய்து வந்த குரங்கு!
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கொட்டிகெஹரா எனும் காட்டுப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் ‘பொன்னட் மக்காக்’ என்ற வகையைச் சேர்ந்த 5 வயதாகும் குரங்கு ஒன்று வலம் வந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது அவர்கள் கையில் வைத்திருக்கும் பழங்கள், உணவு பண்டங்கள் போன்றவற்றை அந்த குரங்கு அடிக்கடி பறித்து செல்லும், ஆனால் குரங்குகளின் இயல்பு இது தானே என்றாலும் அப்பகுதியினர் எச்சரிக்கையாகவே கடந்து செல்வர்.
கர்நாடகாவில் பள்ளிகள் திறந்த பின்னர் கொட்டிகெஹரா பகுதியில் உள்ள மொரார்ஜி தேசாய் பள்ளி அருகே அந்த குரங்கு நடமாடி வந்ததால் அங்கு பயிலும் மாணவர்கள் குரங்கால் அச்சம் அடைந்தனர்.
எனினும் ஒரு சில மாணவர்கள் குரங்கின் அட்டகாசத்தை தாக்குபிடிக்க முடியாமல் வனத்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்தனர்.
வனத்துறையினர் குரங்கை பிடிக்க முடிவெடுத்து கடந்த செப்டம்பர் 16ம் தேதியன்று கொட்டிகெஹரா கிராமத்துக்கு வந்தனர், எனினும் அந்த சுட்டி குரங்கை பிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
பாடாய்ப்படுத்தியதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் போன்றோரை வனத்துறையினர் உதவிக்கு அழைத்தனர். ஒரு திசை பக்கமாக அந்த குரங்கை வரச்செய்து திட்டமிட்டபடி அங்கிருந்தவர்கள் அனைவரும் குரங்குக்கு அணை கட்டினர்.
அப்போது ஆட்டோ ஓட்டுனர் ஜகதீஷ் என்பவர் வனத்துறையினர் கூறியபடி குறிப்பிட்ட திசையில் குரங்கை பயமுறுத்தி திசைதிருப்பிய போது ஆத்திரமடைந்த குரங்கு திடீரென ஜகதீஷ் பக்கம் பாய்ந்து அவரை தாக்கி, கையில் கடித்து, புரண்டி எடுத்தது. இதனால் பயந்து போன ஜக்தீஷ் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்.
இருப்பினும் அவர் செல்லும் பக்கமெல்லாம் குரங்கு அவரை விரட்டியது. கடைசியாக அவர் தனது ஆட்டோவுக்குள் சென்று பதுங்கினார்.
ஆனல் குரங்கு அவரின் ஆட்டோவை தாக்கி கூரையை கிழித்தது. சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் மூன்று மணி நேரம் போராடி குரங்கை ஒருவழியாக பிடித்தனர். பிடிபட்ட குரங்கை வனத்துறையினர் 22 கிமீ தொலைவில் உள்ள பலுர் காட்டுப்பகுதியில் திறந்துவிட்டனர். குரங்கு பிடிபட்டதை அறிந்த கிரமத்தினர் நிம்மதி அடைந்தனர்.
ஆனால் அடுத்த ஒரு வாரத்துக்குள் குரங்கு அந்த கிராமத்துக்கு திரும்பி வரும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. புத்திசாலியான அந்த குரங்கு பலுர் காட்டுப்பகுதி வழியாக வந்த ஒரு லாரியின் மீது ஏறி அந்த லாரியிலேயே 22 கிமீ பயணித்து கொட்டிகெஹரா கிராமத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.
குரங்கு மீண்டும் கிராமத்துக்கு வந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுனர் ஜக்தீஷ்-க்கு கடுமையான அச்சம் ஏற்பட்டு, அவராகவே வனத்துறையினரை தொடர்பு கொண்டு குரங்கிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுள்ளார்.
பின்னர் மீண்டும் பெரும் போராட்டத்துக்கு இடையே அந்த குரங்கை செப்டம்பர் 22ம் தேதி பிடித்த வனத்துறையினர் இந்த முறை அதனை வெகுதூரம் உள்ள காட்டுப்பகுதியில் திறந்துவிட்டுள்ளனர்.
அந்த குரங்கு மீண்டும் வருமோ என்ற அச்சத்தில் தற்போது ஜகதீஷ் தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். அவர் கூறுகையில் குரங்கு என் கையை பலமாக கடித்தது, என்னால் ஒரு மாதத்துக்கு வேலை பார்க்க முடியாது.
நான் பயத்தில் இருந்த நேரத்தில் என்னை இச்சம்பவம் குறித்து முடிகேரி வனத்துறை அதிகாரி மோகன்குமார் கூறுகையில், குரங்கு பழிவாங்குவதற்காக இத்தனை கிமீ பயணம் செய்து வந்திருப்பதை இப்போது தான் பார்க்கிறோம்.
அவருக்கும் அந்த குரங்குக்கும் ஏற்கனவே முன்பகை ஏதும் இருந்ததா என புரியவில்லை, ஆனால் இந்த குரங்கு விஷயம் ஆச்சரியமளிக்கிறது என்றார் அவர்.