தேசிய பாதுகாப்பு அகாதெமி தோ்வுக்கு திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம்
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, நவம்பரில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) தோ்வுக்கு திருமணமாகாத பெண்கள் அக்டோபா் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி ஆகியவற்றில் ஆண்கள் மட்டுமே சோ்த்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் பெண்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை, பாகுபாட்டுக்கு எதிரான உரிமை ஆகியவை பாதிக்கப்படுவதாகவும் வழக்குரைஞா் குஷ் கல்ரா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ரிஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட அமா்வு, கடந்த மாதம் 18-ஆம் தேதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், தகுதிவாய்ந்த பெண்கள் என்டிஏ தோ்வில் பங்கேற்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, நவம்பா் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள என்டிஏ தோ்வுக்கு செப். 24 முதல் அக். 8-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. திருமணமாகாத பெண்கள் மட்டும் தோ்வுக்கு விண்ணப்பிக்குமாறு யுபிஎஸ்சி வலியுறுத்தியுள்ளது.
பெண் தோ்வா்களுக்குத் தோ்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான குடியுரிமை, வயது, கல்வி உள்ளிட்ட இதர தகுதிகளையும் யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. என்டிஏ-வில் இணையும் பெண்களுக்கான உடற்தகுதி, காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்களை சோ்த்துக் கொள்வது தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பைப் பொருத்து பெண்கள் சோ்க்கைக்கான விதிமுறைகள் மாறுதலுக்கு உள்பட்டது என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.